கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை செக்போஸ்ட் பகுதியில் பறக்கும் படை அதிகாரி செல்வராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அதிமுக கொடி பொருத்தப்பட்ட முசிறி சட்டமன்ற உறுப்பினர் செல்வராசுக்கு சொந்தமான இன்னோவா காரில் ஒரு கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று திருச்சி பெரிய கடை வீதி தைலா சில்க்ஸ் அருகே கூட்டுறவு சார் பதிவாளரும், திருச்சி கிழக்குத் தொகுதியின் பறக்கும் படை அலுவலருமான பீட்டர் லியோனார்ட் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 'TN 81 C 2998' இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்ததில், இரண்டு பாக்ஸ்களில் மறைத்து, கொண்டு செல்லப்பட்ட தங்க நகைகளைக் கண்டு பறக்கும் படை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காரில் வந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் உரிய ஆவனங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பெட்டியில் இருந்த 5,961 கிலோ கிராம் தங்க ஆபரண நகைகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2 கோடியே 60 லட்சம் எனத் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க ஆபரண நகைகளை கிழக்கு தாசில்தார் குகனிடம் ஒப்படைத்தனர்.