சிதம்பரம் நகரத்தை ஒட்டியுள்ள வண்டிகேட் பகுதியில், பாசிமுத்தான் ஓடை பாசன வாய்க்காலில், முதலை இருப்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கனமழை பெய்து வெள்ளநீர் புகுந்தது. இதனால் சிதம்பரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் வெள்ள நீர் சூழ்ந்ததால், முதலைகள் ஆற்றிலிருந்து அடித்துவந்து குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில் தஞ்சம் புகுந்தது.
இந்நிலையில் வல்லம்படுகை செல்வமணி என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் தேங்கியிருந்த தண்ணீரில், முதலை இருந்ததைக் கண்டு அவர்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் முதலையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சிதம்பரம் நகரை ஒட்டி வண்டிகேட் பகுதியில் ஓடும் பாசிமுத்தான் ஓடை பாசன வாய்க்காலில், முதலை இருப்பதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து கூச்சலிட்டுள்ளனர். பொதுமக்களின் சத்தத்தைக் கேட்டு முதலை, வாய்க்காலில் இறங்கியுள்ளது. பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் வாய்க்கால் கரையில் ஒதுங்குகிறது. இந்நிலையில், முதலை இருப்பது தெரியாமல் அந்தப் பகுதியில் உள்ள சிலர், வாய்க்காலில் இறங்கிக் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பணிகளைச் செய்து வருகிறார்கள். எனவே பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன் இந்த முதலையைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.