Skip to main content

சிவப்பை மேலும் சிவப்பாக்கிய நன்மாறன்! 

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

CPIM Former MLA Nanmaran

 

சென்னை விக்ரம் சாராபாய் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு சிறு தொழில் நிறுவன அதிபர், அப்போது இருந்த ஒரு பிரபல ரவுடி மூலம் அடியாட்களை ஏவி  உண்ணாவிரதம் இருந்த சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை மிரட்டித் தாக்கும் முயற்சிகளில் இறங்கிய வேளையில், அந்த தொழிலதிபரின் இல்லத்துக்கே சென்ற என். நன்மாறன் அவர் மனைவிக்கு மரியாதை கலந்த வணக்கம் தெரிவித்து அந்தவீட்டுக் குழந்தைகளிடம் பாசத்தோடு விளையாடி  வீட்டைவிட்டு வெளிவரும்போது “இதே போன்ற குழந்தைகள் அங்கு உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வீட்டிலும் இருக்கிறார்கள். அவர்களை தங்கள் வீட்டுக் குழந்தைகளாக நினைத்து வேலைநிறுத்த விசயத்தில் நல்ல முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்” என்று புன்னகை ததும்பும் முகத்துடன் வேண்டுகோள் வைத்து திரும்பினார்.  அடுத்த இரண்டுமணி நேரத்தில் அத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்தது.

 

வாலிபர்களையும் இளைஞர்களையும் ஒரு அமைப்பாகத் திரட்டிக் கொண்டிருந்த தோழர் சு.பொ.அகத்தியலிங்கத்தின் நங்கநல்லூர் “சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி” இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாக (DYFI), பரிணாம வளர்ச்சியடைந்த சமயம். கிராமம் கிராமமாக ஒடுக்கப்பட்ட ஏழை மக்கள் வாழும் குடிசைப்பகுதிகளுக்கு சென்ற என்.நன்மாறனின் நகைச்சுவையுடன் கூடிய ஆழமான பேச்சுத்திறன் DYFI வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தது.

 

DYFI பணிகளோடு நின்று விடாமல் மைதிலி சிவராமன், பாப்பா உமாநாத் போன்றோர்களுடன் இணைந்து பரவலாக இந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்புகளைக் கட்டுவதிலும் பங்கெடுத்துக் கொண்டார். சிதம்பரம்பத்மினி, வாச்சாத்தி, சின்னாம்பதி, மலைவாழ் பெண்கள் பாதுகாப்புக்கான அமிர்தம், புனிதா, உ.வாசுகி, ஜான்சி, பாலபாரதி, வனஜா, மகளிர் சிந்தனை மஞ்சு போன்றோர்களை உருவாக்கியதில் என்.நன்மாறனுக்குப் பெரும் பங்குண்டு.

 

மதுரை இ.ஜ.மா. சங்க பி.லீலாவதி பகுதிவாழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட கொடும் நிகழ்வு அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. “என்னைக் கொன்றிருக்கலாமே!” என கதறியழுதார்.

 

ஆலைத்தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி வீதி நாடகக்கலை வடிவில் தன் நாடகக் குழுவின் சக கலைஞர்களைக் காப்பாற்ற இளைஞர் காங்கிரஸாரின் அனைத்து அடி உதைகளையும் கத்திக் குத்துக்களையும் தாங்கி மண்டை பிளந்து உயிர் விட்ட “ஹல்லாபோல்! சப்தர் ஹாஷ்மியின்” (உரக்கப்பேசு; உரக்கப்பேசு) வீதி நாடக போராட்ட வடிவத்தை  முன்னெடுத்த ஹாஷ்மியின் மனைவி மாலா ஸ்ரீ ஹாஷ்மி 1989ல் சென்னை வந்தபோது வரவேற்று செவ்வணக்கம் செலுத்தியவர் என்.நன்மாறன்.

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமாக, விஸ்வரூபம் எடுத்திருக்கும் த.மு.எ.க.ச.வின் ஆரம்ப கட்டத்தில் சிறு  அரங்கங்களில், தெருக்களில் அவர் ஆற்றிய உரைகள் பெரும் சிந்தனை வீச்சுக் கொண்டவை. சென்னைக் கலைக்குழு ஆரம்ப காலகட்டங்களில் சிறு சிறு வீதி நாடகங்களை மக்களோடு மக்களாக தெருவில் நின்று, உட்கார்ந்து முற்போக்குக் கவிஞர். பிரளயன் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களின் அரசியல் நையாண்டிகளை ரசித்து வயிறு குலுங்கச் சிரித்து ஒரு குழந்தையைப் போல மக்களோடு மக்களாக ரசித்தவர்.

 

கரிசல்காட்டு கி.ரா உட்பட அனைத்து எழுத்தாளர்களுடன் கண்ணியமான படைப்பு விமர்சன உறவு வைத்திருந்தார். செந்தில்நாதன், தணிகைச்செல்வன், கோமல் சுவாமிநாதன், மயிலை பாலு, பரிக் ஷா ஞானி, இரா.தெ.முத்து, சி.எம்.குமார், கி.அன்பரசன் போன்ற முற்போக்கு கலைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் நன்மாறன். இரு முறை தமிழ்நாடு சட்டசபை உறுப்பினராக இருந்தும் சொத்துக்கள் ஏதுமின்றி என்றுமே மதுரை சிவப்புமண் எம்.பி.க்கள் மோகன், சு.வெங்கடேசன் போன்றோர்களின் வழிகாட்டி.

 

மதுரை ஆரப்பாளையம் ரயில் கேட் அருகே தூசி புழுதி நிறைந்த குப்பைகள் சூழ்ந்த மூலையில் ‘டீ’ கிளாசுடன் அமர்ந்து  நெல் பேட்டை மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘தீக்கதிர்’ நாளிதழில் வி.பி.சிந்தன் எழுதியிருந்த தொழிற்சங்க அமைப்புக் கட்டுரையை வரி வரியாகப் படித்து விளக்கம் அளிப்பார். ‘ஏன் தோழர்?’ என்று கேட்பவர்களிடம் “மக்களிடம் நாம்தான் செல்ல வேண்டும்” என்பது அவரது பதில். உழைப்பாலான வியர்வையுடன் தொழிலாளிகள் கூட்டமாக அமர்ந்து டீ குடிக்கும் கடைகளில்தான் அவர்களுடன் சேர்ந்து அவரும் டீ குடிப்பார்.

 

இலங்கைத் தமிழர்கள் நலனில் தனி அக்கறை கொண்டிருந்தவர். கலைஞர், பழ.நெடுமாறன், திருமாறன், சுப.வீரபாண்டியன், தியாகு, வைகோ போன்றவர்களுடன் மட்டுமன்றி தான் சந்திக்கும் மனிதர்களிடமெல்லாம் இலங்கையில்  இனக்கொடுமை அனுபவித்து  தாய்மண் தேடி வந்திருக்கும் தமிழ் மக்களை அரசு சரியாகக் கவனிப்பதில்லை என்ற மன அழுத்தத்தை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர் நன்மாறன்.

 

நன்மாறன் மறைந்த, அதே (28ஆம் தேதி) நாளில்தான், சிறுபான்மையினர் நல அமைச்சர் மஸ்தான் தலைமையில் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. இருபது பேர் கொண்ட இந்தக் குழு  இலங்கைத் தமிழர் வாழ்வாதாரம், மறுவாழ்வு முகாம் வாழ்விட மேம்பாடு குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும். 

 

நன்மாறனின் இலங்கை தமிழர்கள் குறித்தான கவலையை கலைக்கும் வகையில் இலங்கை தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் மூலம் நடக்கவிருக்கும் நன்மைகளை காண நன்மாறன் இன்று நம்முடன்  இல்லை.

 

 - சுந்தர் சிவலிங்கம்

 

 

சார்ந்த செய்திகள்