
குட்கா விவகாரம் தொடர்பாக குடோன் உரிமையாளர் மாதவராவ்,மாதவராவின் பங்குதாரர்கள் இருவர், உணவு பாதுகாப்பு மற்றும் கலால் துறை அதிகாரிகள் என இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
அந்த சம்மனில் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராகும் படி கூறப்பட்டுள்ளது. குட்கா ஊழல் நடந்த சமயத்தில் ஜெயக்குமார் சென்னை மத்தியகுற்றப்பிரிவில் துணை ஆணையராக இருந்தார்.
2013-ஆம் ஆண்டு குட்கா பொருட்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிறகு ஜெயக்குமார் தலைமையிலான குழு மாதவராவ் குடோனில் 2014-ஆம் ஆண்டு சோதனை மேற்கொண்டது. ஆனால் அதன் பின்னர் குட்கா குறித்த நடவடிக்கைகள் ஏதும் இல்லாததால் இதுபற்றிய விவரங்கள் மர்மமாக இருந்தது.
இதுபற்றி முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் இதற்கெல்லாம் காரணம் ஜெயக்குமார்தான் என கூறி குட்கா ஊழல் தொடர்பான ஆதாரங்ககளை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாரிடம் இன்று நடக்கவிருக்கும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.