தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணிகள் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கத் தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் நூற்றாண்டை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 22 மற்றும் 29 ஆம் தேதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பேரணி நடத்த அனுமதி கேட்டு காவல்துறையில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனுவை காவல்துறை நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், 'இந்த வழக்கை பொறுத்தவரை எந்த இடங்களில் பேரணி செல்கிறார்கள் என்பது தொடர்பான போதுமான விவரங்களை மனுவில் குறிப்பிடப்படவில்லை. இந்த பேரணியால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது என உளவுத்துறை எச்சரித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலேயே காவல்துறை நிராகரித்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி, அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளிப்பதாகவும், எந்த இடத்தில் பேரணியைத் தொடங்குவது என்பது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் எனவும், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் நிலவரங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்' என உத்தரவிட்டு பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.