அரசு மதுபானக்கடை அருகே சட்ட விரோதமாக 24 நேரமும் மதுபானம் விற்பனை செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரவு 10 மணியிலிருந்து மறுநாள் மதியம் 12 மணிவரை அரசு மதுபானக் கடை ஊழியர்கள் மற்றும் பார் நடத்துபவர்களும் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசன்ய தெருவில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே இரவு பகல் என 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் காட்சிகளை மது அருந்தும் ஒருவரே எடுத்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் "சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க மயிலாடுதுறை நகரத்தின் பிரதான தெருக்களில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகம் பயன்படுத்துகின்ற பகுதிகளான கூறைநாடு மாமரத்து மேடை மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மகாதான தெரு பகுதிகளிலேயே அரசு மதுபானக்கடை அமைந்துள்ளது. குறிப்பாகக் கூறைநாடு மாமரத்து மேடை அருகில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளால் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கக்கூடிய பொதுமக்கள் அமர வேண்டிய இருக்கைகளில், அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளிலிருந்து நேரடியாக மதுபான பாட்டில்களை வாங்கி வந்து அங்கே அமர்ந்து குடித்துவிட்டு அலங்கோலமாகத் தூங்குகின்ற நிலையைப் பார்த்து கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் முகம் சுளிப்பதுடன் பேருந்துகளில் ஏறுவதற்கு முடியாமல் தவிப்பதையும் காண முடிகிறது.
‘பொதுமக்களுக்கு இடையூறாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் குடிகாரர்கள் அமர்ந்து குடிக்காத வண்ணம் தடுத்து நிறுத்தித் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்பதே மயிலாடுதுறை நகர மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.