சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "900 படுக்கை வசதிகளுடன் உள்ள முகாமில் முதற்கட்டமாக 250 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். லேசான அறிகுறி இருப்பவர்களுக்காக கரோனா சிகிச்சை மையங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் தனியார் கோவிட் கேர் மையங்களை அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மே- 1 ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் கரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ளலாம். இனியும் காலம் தாமதம் செய்யாமல் 45 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும். சென்னையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாது; சென்னைக்கு மட்டுமே இரண்டு லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் 3 அல்லது 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு வழங்கப்பட உள்ளது" என்றார்.