கரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ள தொழில் பாதிப்பால் அருப்புக்கோட்டையும் அலறுகிறது. விசைத்தறிகள் நிறைந்துள்ள இவ்வூரில் பிரதான தொழிலான ஜவுளி உற்பத்தி முடங்கி, ஜவுளிகளும் தேங்கிவிட்ட நிலையில், மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி மற்றும் வங்கிக்கடனுக்கான வட்டி போன்றவற்றை 3 மாதங்கள் ரத்து செய்ய வேண்டும். மேலும், கரோனா வைரஸ் பாதிப்பு நீடிக்கும் வரையிலும், பொங்கலுக்கு ரேசன் கார்டுக்கு ரூ.1000 வழங்கியதுபோல், நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்க வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்களும், நெசவாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கும் அருப்புக்கோட்டையில், ஜவுளித்தொழிலானது சுமார் 25000 பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் விற்பனையாகின்றன. ஜவுளிச் சந்தைகள் பலவும் மூடப்பட்டுவிட்டதாலும், திருமண நிகழ்ச்சிகளிலோ, திருவிழாவிலோ வழக்கம்போல் மக்கள் கூடுவதற்கு அரசு தடை விதித்ததாலும், சேலைகள் விற்பனை மந்தமாகிவிட்டன. வெளி மாநிலங்களுக்கு ஜவுளிகளை அனுப்ப முடியாததால், ஜவுளிகள் முற்றிலுமாக அருப்புக்கோட்டையிலேயே தேங்கிவிட்டன. அதனால், கோடிக்கணக்கில் புரளும் ஜவுளி வர்த்தகம் இங்கு பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில்தான், ஜி.எஸ்.டி. ரத்து, ரேசன் கார்டுக்கு நிதியுதவி போன்ற சலுகைகளை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து அருப்புக்கோட்டை நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.