தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் நாளை (10/05/2021) முதல் மே 24- ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
முழு ஊரடங்கு நாளை (10/05/2021) காலை முதல் அமலுக்கு வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (09/05/2021) காலை 11.30 மணிக்கு தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில், நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
முழு ஊரடங்கு மற்றும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் கண்காணிப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் கூறுகின்றன.
இந்த அமைச்சரவையின் கூட்டத்திற்கு பின், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.