கரோனா வைரஸ் பரவல் இப்போது ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும், மீண்டும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், பொது வெளிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் அறிவுறுத்தி உள்ளார்.
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த 11 மாதங்களாக உலக நாடுகளை மொத்தமாக ஆட்டம் காணச் செய்து விட்டது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா காய்ச்சலுக்கு 13.63 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு இதுவரை 1.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் துரிதமாக நடந்து வருகின்றன. என்றாலும், கைகளை சோப்பு அல்லது சானிடைஸர் மூலம் நன்றாக கழுவுதல், பொது வெளிகளில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
தற்போது கரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பொதுமக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் பொதுவெளிகளில் சுற்றுத்திரிவது அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் கரோனா பரவும் அபாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு 5400 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நவ.20- ஆம் தேதி வரை 5000 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 327 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் கூறுகையில், ''கரோனா பரவலின் தாக்கம் அதிகமாக இருந்தபோது எல்லோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. அதனால்தான் 90 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்தனர்.
இந்நிலையில், தீபாவளிக்கு பிறகு ஓரளவு கரோனா பரவும் வேகம் குறைவாகிப் போனதால் பொதுமக்கள் நோய் பரவும் என்ற அச்சமின்றி முகக்கவசம் அணியாமலேயே பொது வெளிகளில் சுற்றுகின்றனர்.
இதனால் கரோனாவின் இரண்டாவது அலை வந்து விடும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் கரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கும் அபாயம் இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து கரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம்,'' என்றார்.