கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிசம்பர் 31- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துணை முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனையில் உருமாறிய கரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுப்பது, மேலும் தளர்வுகளை அளிப்பது, கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைப் பற்றி முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் கருத்துக்கள் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுத்து, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.