பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று (22/03/2020) ஒரு நாள் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன் பிறகு நேற்று மாலை 05.00 மணிக்கு பொதுமக்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் தங்களது குடும்பத்தினருடன் வீட்டு வாசலில் நின்று கைதட்டியும், மணி ஓசை எழுப்பியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் திண்டுக்கல்லைச் சேர்ந்த மண மகன் ராஜேஸ் கண்ணனுக்கும் அருப்புக்கோட்டை சேர்ந்த மணமகள் உமாமகேஸ்வரிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள சாத்தங்குடி நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று (22/03/2020) இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
ஆனால் ஏற்கனவே திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு இருந்ததால் குறிப்பிட்ட இந்த நாளில் திருமணம் நடக்க வேண்டுமே தவிர தள்ளிபோட கூடாது என்று இருவீட்டாரும் ஒருமனதாகப் பேசி முடிவு செய்ததின் பேரில் அதே நாளில் நடத்த திட்டமிட்டனர். அதன்படி உறவினர்கள் முன்னிலையில் இத்திருமணம் நேற்று (22/03/2020) காலை 07.00 மணி முதல் 08.00 மணி வரை நடைபெற்றது.
சுய ஊரடங்கு காரணமாக உறவினர்களும், நண்பர்களும் பெரிய அளவில் திருமணத்திற்கு வருகை தராவிட்டாலும் கூட இருவீட்டார் உறவினர்கள் முன்னிலையில் இத்திருமணம் முறைப்படி நடைபெற்றது. இத்திருமணத்துக்கு வந்த உறவினர்களுக்கு இருவீட்டார் சார்பில் 'மாஸ்க்' கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் கைகளைக் கழுவுவதற்கு 'கிருமி நாசினி' கொடுக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி கொண்டுதான் உறவினர்கள் மணமேடைக்குச் சென்று மணமக்களின் திருமணத்தையும் பார்த்துவிட்டு வாழ்த்துகளையும் கூறி விட்டுச் சென்றனர்.
இதுபற்றி மணமகன் உறவினர்கள் சிலரிடம் கேட்டபோது, "கரோனா வைரஸை ஒழிக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனிக்கவனம் செலுத்தி மக்கள் மத்தியில் பரவாமல் இருக்க நேற்று (22/03/2020) ஒரு நாள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கூறியிருக்கிறார். அது உண்மையிலேயே பாராட்டக்கூடிய விஷயம் இருந்தாலும், ஏற்கனவே திருமணம் நிச்சயக்கப்பட்ட பத்திரிகைகளும் ஊர் முழுவதும் கொடுத்து விட்டோம். அப்படி இருந்தும் திருமணத்தைத் தள்ளிப் போடக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகத் தான் இரு வீட்டார் உறவினர்களை மட்டும் இரவோடு இரவாக அழைத்து வந்து அதிகாலையில் இத்திருமணத்தை நடத்தி உறவினர்களையும் அனுப்பி வைத்து விட்டோம்.
அந்த அளவுக்கு பிரதமர் மோடியின் உத்தரவை நாங்களும் மதிக்கிறோம். அதுபோல் காவல்துறையினரும் எங்களை எந்த ஒரு தொந்தரவும் செய்யவில்லை. திருமணம் முடிந்தவுடன் உடனடியாக உறவினர்களை அனுப்பச் சொல்லியிருந்தார்கள். அவர்களின் அறிவுரையின் பேரில் நாங்களும் அனுப்பி விட்டோம். இப்படி கரோனா ஒழிப்பு தினத்தன்று திருமணம் நடந்ததும் பெருமையாக இருக்கிறது" என்றனர். பொதுவாகத் திருமண நாளை மறந்துவிட்ட காரணத்துக்காக கணவன் - மனைவிக்குள் சண்டைகள் வருவதுண்டு. ஆனால், இவர்களது திருமண நாள் மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். புதுமண தம்பதிக்கு வாழ்த்துகள்!!!