சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 35 பேரும் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 24 மணி நேரத்தில், ஒரே நாளில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்திற்கு இந்தோனேஷியாவில் இருந்து வருகை தந்த முஸ்லிம் மதகுருமார்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டி என மொத்தம் 5 பேருக்கு முதன்முதலில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. அடுத்தடுத்த நாள்களில் கணிசமாக நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. மொத்தமாக சேலம் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவர்களில் குணமடைந்த பலர் அவ்வப்போது அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடைசியாக சிகிச்சை பெற்று வந்த மூவரும் குணமடைந்ததை அடுத்து, வெள்ளிக்கிழமையன்று (மே 15) அவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அதன்மூலம், சேலம் மாவட்டம் கரோனா தொற்றாளர்கள் இல்லாத மாவட்டமாக மாறியதாக மாவட்ட ஆட்சியர் ராமன் பெருமிதத்துடன் கூறினார். அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், சுகாதாரப்பணிகள், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் மட்டுமின்றி மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, சேலத்தை வசிப்பிடமாகக் கொண்டோ அல்லது பணி நிமித்தமாகவோ வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்புவோருக்கு அல்லது வேறு பணி நிமித்தமாக சேலத்திற்கு வருவோருக்கு மாவட்ட எல்லையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் அவர்கள் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி, பெத்தநாயக்கன்பாளையம் ஏகலைவா பள்ளி, மாதிரி பள்ளிகள், சங்ககிரி மாதிரி பள்ளி, ஆத்தூர் பாவேந்தர் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.
பரிசோதனை முடிவில் நோய்த்தொற்று இல்லை என்று உறுதியான பிறகே அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு வெளியே இருந்து சேலத்திற்குள் நுழைந்தவர்களுக்கு சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில், சனி க்கிழமை (மே 16) ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அதேநேரம், சேலம் மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் யாருக்கும் புதிதாக கொரோனா நோய்த்தொற்று கடந்த சில நாள்களாக உறுதிப்ப டுத்தப்படவில்லை.
புதிதாக நோய் கண்டறியப்பட்டவர்களில் சேலம் அம்மாபேட்டையில் பாபு நகரைச் சேர்ந்த இருவர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஒருவர், முகமதுபுறா தெருவைச் சேர்ந்த ஒருவர், பெரிய புதூரைச் சேர்ந்த ஒருவர், ஏஓஎஸ் கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்த ஒருவர், நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ஒருவர், முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வீராணத்தில் ஒருவர் என சேலம் மாநகர பகுதிகளில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளில் மேட்டூர் கருமலைக்கூடலில் ஒருவர், கொளத்தூரில் ஒருவர், கெங்கவல்லி செந்தாரப்பட்டியைச் சேர்ந்த ஒருவர், சார்வாய்புதூரைச் சேர்ந்த ஒருவர், ஓமலூர் மூங்கில்பாடியைச் சேர்ந்த ஒருவர், ஆத்தூர் சார்வாயைச் சேர்ந்த ஒருவர், பூசாரிப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 7 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
நோய்த்தொற்று கண்டறியப்பட்ட மேற்கூறிய அனைவருமே வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வந்தவர்கள் என்பதும், அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சுகாதாரப்பணிகள் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''சேலம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வருபவர்களில் கடந்த சில நாள்களாக யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
இப்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருமே கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் மற்றும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் சென்று திரும்பிய சேலத்து மக்கள்.
வெளியே இருந்து சேலத்திற்கு வரும் வாகனங்களை காவல்துறையினர் தீவிரமாக தணிக்கை செய்து, அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். சுகாதாரத்துறை, மாநகராட்சி, உள்ளாட்சித்துறைகள் சுகாதாரத்துறையுடன் மிகுந்த ஒத்துழைப்பு தருவதால்தான் இதுபோன்ற புதிய தொற்றாளர்களை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை கரோனா நோய்த்தொற்று சமூகப்பரவலாக மாறவில்லை. அப்படியான பீதியோ, அச்சமோ தேவையில்லை. வெளியே இருந்து சேலத்திற்கு வருவோர் மாவட்ட, மாநகர எல்லைகளில் மடக்கி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்குச் சென்றுவிட்டு யாரேனும் வந்திருந்தால் அதுபற்றி மக்கள், சுகாதாரத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்,'' என்றார்.