Skip to main content

கரோனா தொற்று நோயாளிகள் 'கபடி' விளையாட்டு...

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

Kabaddi game

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கோல்டன் ஜூபிலி விடுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்  கபடி விளையாடிய வீடியோ வைரலாகப் பரவுகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டு ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் 150க்கும் மேற்பட்ட கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்லி விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வார்டில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்களிடம் கூறாமல் 5ஆம் தேதி மாலை மொட்டை மாடிக்குச் சென்று ஒன்று கூடி கபடி விளையாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

கரோனோ வைரஸ் தொற்று நோய் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அதுவும் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் நோயின் தாக்கம் பற்றிய பயம் சிறிதும் இல்லாமல் கபடி விளையாடியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த கோல்டன் ஜூப்லி ஹாஸ்டல் மருத்துவமனை வருவாய்த்துறையினர் மேற்பார்வையில் உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் 06- ஆம் தேதி சென்று விசாரணை நடத்தி கபடி விளையாட்டில் ஈடுபட்டவர்களை எச்சரிக்கை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்