சீனாவில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றினால் 1,09,400 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 3800 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 72 ஆக இருந்தது.
அந்த வகையில் பிராய்லர் கோழி சாப்பிட்டால் கரோனா வருகிறது என்ற வதந்தியைப் பரப்பி விட்டார்கள். இதனால் பிராய்லர் கோழிகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அசைவ உணவகங்களில் கடுமையாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிரியாணிக்கு பெயர் பெற்ற ஆம்பூர், வாணியம்பாடியில் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி விற்பனை என்பது பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் சிக்கன், மட்டன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மட்டனை விட சிக்கன் விலை மிக கடுமையான அளவில் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் வரை கிலோ 160 வரை விற்பனையான பிராய்லர் சிக்கன், மார்ச் 12ந்தேதி ஆம்பூரில் கிலோ 30 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை என்பது மிகப்பெரிய நட்டம் தான். ஆனால் பிராய்லர் கோழிகளை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது என்பதால் இந்த விலைக்கு விற்பனை செய்கிறோம் என்கிறார்கள் ஆம்பூர், வாணியம்பாடி பகுதி அசைவ விற்பனையாளர்கள். இதேநிலை தான் தமிழகம் முழுவதும் என்கிறார்கள் கறிக்கோழி விற்பனையாளர்கள். மருத்துவ ரீதியாக ஆடு, கோழி, மாடு, மீன் போன்றவற்றால் தான் கரோனா பரவுகிறது என உறுதியாகாத நிலையில் வதந்திகள் வேகமாக பரவியால் இப்படி அசைவத்தின் விலை வீழ்ச்சியடைய அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.