கரோனா ஊரடங்கினால், வீட்டில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்தும், செல்போனில் வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர், யுடியூப்களை மேய்ந்தும், பொழுது போக்குவதே நாட்டில் பலருக்கும் பெரும் சிரமமாக ஆகிவிட்ட நிலையில், மருத்துவத்துறையில் சேவையாற்றுவோரும், காவல்துறையில் பணியாற்றுவோரும், நெருக்கடியான நிலையை உணர்ந்து, நாம் அனைவரும் நன்றி செலுத்தும் விதத்தில், செவ்வனே கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
கரோனா ஒருபக்கம் கொடூரமாக அச்சுறுத்தினாலும், எந்த சலனமுமின்றி, இயங்கிக்கொண்டே இருப்பவர்கள், நம்மிடையே உள்ளனர். அவர்களில் சிலரை சந்தித்தோம்.
இரவு நேரத்திலும் பரபரப்பாக துப்புரவு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள், அந்த தூய்மைப் பணியாளர்கள். அவர்களின் கவனமெல்லாம், அங்கங்கே கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்துவதிலேயே இருந்தது. பிளாட்பார வாசிகளான இரு பெண்கள் அங்கே சாலையோரம் சோகமாக அமர்ந்திருந்தனர். சாலையில் நடமாட்டம் இருந்தால்தானே, யாராவது கருணை கண் கொண்டு பார்த்து உதவுவர் என்ற கவலை அவர்களின் அழுக்கு முகத்தில் பளிச்சென்று வெளிப்பட்டது.
பால், அத்தியாவசியமாயிற்றே! தனது மாட்டிலிருந்து பால் கறந்துகொண்டிருந்த சண்முகய்யா, “கறக்கிற வேலை பெரிசில்ல.. எல்லா பாலையும் நல்லபடியா வாடிக்கையாளர் வீட்ல கொண்டுபோய் சேர்க்கணும்... ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களைப் பார்க்கும்போது கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.” என்றார்.
பாரத் காஸ் சிலிண்டர் கம்பெனியில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் தொழிலாளர்கள். டூ வீலரில் சிலிண்டர்களுடன் கிளம்பிய ஆசைத்தம்பி, ‘அத்தியாவசிய சேவை துறை’ என, தங்களுக்கு வழங்கியிருந்த சான்றிதழை நம்மிடம் காண்பித்தார். “பஸ் இல்ல.. ரயில் இல்ல.. ஆனா. எப்பவும் போல எங்களுக்கு வேலை. பெருமையாத்தான் இருக்கு.” என்றார்.
ட்ரை சைக்கிளில் வந்த அந்த தேங்காய் வியாபாரி, வீடுகளில் ’டோர் டெலிவரி’ செய்துகொண்டிருந்தார் “எங்களுக்கு தேங்காய்க் கடை இருக்கு. ஆனாலும், மக்கள் யாரும் தேங்காய் வாங்குறதுக்குன்னு வீட்ல இருந்து கடைக்கு வரவேணாம்னு நாங்களே அவங்கள தேடி வந்திருக்கோம்.” என்றார்.
அக்கா, தம்பியான வேல்விழியாளும் விக்னேஷ்வரனும் தொடர்ந்து பள்ளி விடுமுறை என்பதால், மாடுகள் இரை எடுப்பதற்காக இழுத்துச் சென்றனர். விக்னேஷ்வரன் சொன்னான். “அக்காக்கு கொரொனாக்கு ரொம்ப பயப்படறா. எனக்கு பயமில்ல.” என்றான் சிறுபிள்ளைத்தனமாக.
வாழை வெட்டுவதற்காக மம்பட்டியும் கையுமாக தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தனர், அந்த நான்கு பெண்களும். “அங்கிட்டு வேலை பார்த்துக்கிட்டிருப்போம். இங்கிட்டு பாம்பு நெளிஞ்சுக்கிட்டிருக்கும். பாம்புக்கே நாங்க பயப்படறதில்ல. ஆனா.. பாம்பைவிட இந்த கரோனா மோசம்கிறாங்க. என்னத்த பேசி என்ன பண்ண? விதியிருந்தா பொழச்சிக்குவோம்” என்றனர்.
அந்த வாழைத் தோப்பில் முனியாண்டி நம்பக்கம் திரும்பாமலே வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மகன் சுரேஷ் செடிகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தார். “இந்தக் களையெல்லாம் பிடுங்கினாத்தான் கன்னு எந்திரிக்கும். கொரனா எங்கள எதுவும் பண்ணாது. கிராமத்து பக்கம் அதுக்கு என்ன வேலை?” என்றார், வெள்ளந்தியாக.
கரோனா வீடுகளில் பலரை முடக்கினாலும், அவர்களுக்கும் சேர்த்து உழைக்கும் மக்கள் இயங்கியபடியே உள்ளனர்.