கரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னை வேளச்சேரியில் இயங்கும் ஃபீனிக்ஸ் மால் கட்டிடத்தில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் மூவருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், அங்குள்ள ஒரு குறிப்பிட்ட கடைக்கு மார்ச் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்றவர்கள் மற்றும் அந்த தளத்தில் அமைந்துள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், கரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி கோருமாறும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை செய்திருந்தது.
தற்போது சென்னை பீனிக்ஸ் வணிக வளாகத்திற்குச் சென்ற 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கரோனா அறிகுறி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.