கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கச்சொல்லி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் ஏழை கூலித் தொழிலாளிகள், பொதுமக்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அரசு சார்பில் 15 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை,1 கிலோ பருப்பு,1 லிட்டர் சமையல் எண்ணெய்,ஆயிரம் ரூபாய் பணம் தந்தாலும்,ஊரடங்கால் எகிறிப்போன விலைவாசியால் இந்த 1000 ஆயிரம் ரூபாய் இரண்டு நாளைக்குத் தான் பொதுமக்களுக்கு உபயோகமாக இருந்தது.
இதனால் ஏழை கூலித் தொழிலாளர்கள்,ஒடுக்கப்பட்ட மக்கள்,அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இவர்கள் அனைவரும் தினமும் வேலைக்குச் சென்றால் தான் சாப்பாடு என்கிற நிலையிலேயே உள்ளனர்.இவர்களுக்கு அரசு தந்த பொருட்கள் மற்றும் நிவாரணநிதி போன்றவை போதுமானதாக இல்லை.
பெரும்பாலான ஏழை மக்கள் பிறரிடம் உதவி எனக் கையேந்தவும், கேட்கவும் தயங்குகின்றனர். கடன் வாங்கவும் முடியவில்லை,இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.இது பற்றிய தகவல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாகத் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், திமுகவின் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கவனத்துக்கு வந்தது.கரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த 23ந்தேதி முதல் வீட்டுக்குள்ளேயே இருந்தவர்.தகவல் கேள்விப்பட்டதும் உடனடியாகத் தனது சொந்த நிதி மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சோப்பு, கடுகு, மைதா, ரவை உட்பட மளிகை பொருட்கள் அடங்கிய பையை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்க முடிவு செய்தார்.
திருவண்ணாமலை,தந்தை பெரியார் நகரில் உள்ள தொழிலாளர்கள் 100 பேருக்கு முதல் கட்டமாக அவற்றை வழங்கினார்.தொடர்ந்து மற்றவர்களுக்கு தரும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். அதேபோல் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் கையுறை,முகவுரை,கிருமிநாசினி பாட்டில்கள் போன்றவற்றை வழங்கினார்.மேலும் ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு,மாவட்ட திமுக சார்பில் உணவு,குடிநீர் பாட்டில்கள் போன்றவற்றை வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.