இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா, தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்றுவரை 13 பேர் நோய் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இந்த நிலையில் நோய் பரவல் சந்தேகத்தின் பெயரில் 40 பேர்களின் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் ஆறு நபர்களின் மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றது. அதில் ஐந்து பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்றும், அதில் ஒரு மூன்று வயது பெண் குழந்தைக்கு கரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் மற்றவர்களின் மருத்துவ அறிக்கை வந்து சேரவில்லை. மேலும் ஏற்கனவே நோய்தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என மொத்தம் 92 பேர்களின் மருத்துவ பரிசோதனை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் 10 பேரின் மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த பத்து பேருக்கும் கரோனா அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. இன்னும் 79 நபர்களில் மருத்துவ அறிக்கை வரவேண்டியுள்ளது. அதில் இரண்டு பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை கடலூர் மாவட்டத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் உறவினர்கள், அவரோடு பழகியவர்கள் என மொத்தம் 206 பேர்களின் உமிழ் நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 102 பேர் பற்றிய மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றது. அதில் 14 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மீதி 88 பேருக்கு நோய்த்தொற்று இல்லையென தெரியவந்துள்ளது. மீதமுள்ள 104 நபர்களின் மருத்துவ அறிக்கை வரவேண்டியுள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.