திருச்சியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை தினமும் 200 மேல் சென்றுகொண்டு இருக்கிறது. அதே போன்று கரோனா தொற்று பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் திருச்சியில் பிரபல கரோனா பரிசோதனை மையத்தை அதிரடியாக சீல் வைத்துள்ளது மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும். இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகரில் உள்ள 20க்கும் மேற்பட்ட முக்கிய மருத்துவர் இணைந்து நடந்தும் இரத்தப் பரிசோதனை மையம் 'டாக்டர்ஸ் டயக்னோஸ்டிக் சென்டர்'. திருச்சியில் பெரிய மருத்துமனைகளில் உள்ள முக்கியப் பரிசோதனை முடிவுகள் அத்தனையும் இங்கிருந்துதான் அறிவிப்பார்கள்.
இந்த நிலையில் கரோனா நோய்த் தொற்று காலத்தில் தனித்தன்மையோடு அதேநேரம் நேரடியாக மத்திய அரசின் அனுமதியோடு கரோனோ பரிசோதனைக்கான அனுமதியை வாங்கி பரிசோதனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆரம்பத்தில் கரோனா பரிசோதனைக்கு 3 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்திருந்தார்கள். திருச்சியில் உள்ள மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் கரோனோ நோய்த் தொற்று மாதிரிகளை இந்த மையத்தில் இருந்தே பரிசோதனைக்காக அனுப்பி வைப்பார்கள்.
இந்த நிலையில் இன்று தீடிர் என மாநகராட்சி ஆட்கள் அதிரடியாக வந்து பரிசோதனை மையத்தின் கட்டிடங்கள் விதிமுறைகள் மீறி இருப்பதாகச் சொல்லி பரிசோதனை கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.
அதே நேரத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரோனா பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிப்பதில் சர்ச்சைகள் உள்ளது என்பதால் கரோனோ மாதிரி பரிசோதனை செய்யக்கூடாது என்று அதிரடியாக நோட்டிஸ் அனுப்பி உள்ளனார்கள்.
இதற்கு இடையில் மேக்னம் என்கிற பரிசோதனை நிலையத்திற்கு அனுமதி வாங்கியிருந்தனர். தற்போது அந்த மையத்திற்கு கரோனோ பரிசோதனை செய்ய கூடாது என்று உத்தரவிட்டு உள்ளனர்.
இதே போன்று கோவையில் இருந்து மல்ட்டி என்கிற நிறுவனம் திருச்சியில் தீடீர் என மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் விமானநிலையத்தில் இருந்து வருபவர்களை மட்டும் கரோனோ பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற உத்திரவாதத்தோடு அனுமதி கொடுத்து உள்ளனார்.
தற்போது திருச்சியில் கரோனோ பரிசோதனை செய்ய திருச்சி அரசு மருத்துமனை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏன் தனியார் ரத்தப் பரிசோதனை மையங்களின் மீது இந்த அதிரடி நடவடிக்கை என்று விசாரித்தோம்.
பொதுமக்களிடம் அதிகமாக பரவும் எந்த நோய் வந்தாலும் இந்தப் பரிசோதனை மையத்தின் மீது அரசுத் தரப்பில் நெருக்கடி கொடுப்பது வாடிக்கை. ஏற்கனவே டெங்கு காய்ச்சல் வந்த போதும் நீங்கள் ஏன் டெங்கு காய்ச்சல் பாசிடிவ் கொடுக்கிறீர்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது.
தற்போது கரோனா பரிசோதனையின் போது நீங்கள் பாசிட்டீவ் என்று கொடுக்கும் ரிசல்ட், அரசு மருத்துமனையில் நெகடிவ் என்று வருகிறது என்கிற குற்றச்சாட்டு கடந்த 3 மாதங்களாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்தப் பரிசோதனை மையம் குறித்து அரசுத் தரப்பில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.
கடந்த 3 மாதத்தில் மட்டும் கலெக்டர் முதல், மாவட்ட மருத்துவ அதிகாரிகள் அத்தனை பேரும் அதிரடியாக சோதனை நடத்தியிருக்கிறார்கள். சோதனையில் இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தில் விதிமுறை மீறி இருக்கிறார்கள் அதனால் கட்டிடத்தை மூடுங்கள் என்று இல்லை என்றால் அமைச்சரை பாருங்கள் என்று நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் பரிசோதனை மையத்தில் வேலை பார்த்த 5 பேருக்கு கரோனோ தொற்று ஏற்பட்டதால் பரிசோதனை மையத்தை 1 வாரத்திற்கு விடுமுறை கொடுத்திருந்தார்கள். இந்த நிலையில் மீண்டும் திறந்த சில நாட்களிலே மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியின் நிர்வாகமும் ஒரே நேரத்தில் அதிரடியாக நுழைந்து மூடி விட்டது.
இது குறித்து கருத்து அறிய டாக்டர்ஸ் டயக்னோஸ்டிக் சென்டர் பொறுப்பாளர் மருத்துவர் ரத்திடம் பேசினோம். கடந்த 15 வருடத்திற்கு மேல் இந்த மையம் நடத்தி வருகிறோம். இந்தக் கட்டிடம் கட்டியது 2011ஆம் ஆண்டு. ஆனால் தற்போது திடீர் எனக் கட்டிடத்தில் விதியை மீறி கட்டிவிட்டிர்கள் என்று நோட்டிஸ் கொடுத்தார்கள். 3 மாதம் டைம் கொடுங்கள் சரி செய்கிறேன் என்று சொன்னேன். ஆனால் தீடீர் என சனிக்கிழமை 5 இலட்சம் அபராதம் கட்டுங்கள், இல்லை என்றால் சீல் வைத்து விடுவேன் எனச் சொல்லிவிட்டு திங்கள் கிழமையான இன்று சீல் வைத்து விட்டார்கள். 2011-இல் கட்டின கட்டிடத்திற்கு இப்போது இவ்வளவு அவசர அவசரமாக சீல் வைக்க என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை.
எங்களிடம் 200 மருத்துவ நிபுணர்கள் வேலை செய்கிறார்கள். பரிசோதனை இயந்திரங்கள் அனைத்தும் விலை உயர்ந்த இயந்திரங்கள். பரிசோதனையில் எதுவும் தவறு நடக்க வாய்ப்பு இல்லை. இந்தக் கரோனா பரிசோதனை முடிவுகள் எல்லாம் மிகத் துல்லியமாகத்தான் கொடுத்திருக்கிறோம். ஆனால் உங்கள் மையத்தில் பாசிடிவ் என்று வருகிறது, அரசு மருத்துமனையில் பரிசோதனை செய்தால் நெகடிவ் என்று வருகிறது என்று மாவட்ட நிர்வாகத் தரப்பில் சொல்கிறார்கள். என்னுடைய பரிசோதனையில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை, ஒரு நாளைக்கு 200 பேருக்கு கரோனா இரத்த மாதிரி பரிசோதனை செய்கிறோம். கரோனா மட்டும் இல்லாமல் இன்னும் பல நூறு வகையான சிசிக்சைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறோம்.
மருத்துவத்துறை சட்ட விதியில் 5 சதவீதம் தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறது, என்கிற உத்தரவாதம் இருக்கிறது. ஆனால் எங்களிடம் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் அரசாங்கம் சர்வ பலத்தையும் பயன்படுத்தி எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும் என்றார்.
இதற்கு இடையில் திருச்சியில் பிரபல மருத்துமனைகள், அப்பல்லோ, காவிரி, எஸ்.ஆர்.எம் ஆகிய மருத்துமனைகள் எல்லாம் நிரம்பி வழிகிறது. புதிய கரோனோ நோயாளிகளைச் சேர்க்க இடம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
திருச்சி PWD பொதுப்பணிதுறை எஸ்.சி. ராமமூர்த்திக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துமனைக்குச் செல்ல அங்கே இடம் இல்லை என்று கைவிரித்து விட்டனர்.
இதன் பிறகு மருத்துமனைக்கு வெளியே காத்திருந்து சென்னையில் உள்ள மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி வேறு வழியில்லாமல் அப்பல்லோ மருத்துமனையில் மூடிக்கிடந்த அறையைச் சுத்தப்படுத்தி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருச்சி அரசு மருத்துமனையில் கரோனோ வார்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாலே அவருக்கு கரோனோ பரிசோதனையில், பாசிட்டிவ், நெகட்டிவ் என்று எந்த முடிவு வந்தாலும் இறந்து போனவர் உடலைத் தர மறுக்கிறார்கள்.
கரோனோ நோய்த் தொற்றில் இன்னும் என்னென்ன அரசியல் நடக்க போகிறதோ?