பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற டெல்லி மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பாதிக்கு மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் பலருக்கு கிருமி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனை கரோனோ சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என ரத்தப் பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
![corona test results of 10 people from Pudukkottai](http://image.nakkheeran.in/cdn/farfuture/wDDmBVcSTr7H-B9phV2kRIAyW6O9uxBmvk9txRaKH_I/1585679310/sites/default/files/inline-images/1111_98.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதை ஒட்டியுள்ள புத்தாம்பூர், அரசர்குளம், அன்னவாசல், நெடுங்குடி மற்றும் அறந்தாங்கி எல்.என் புரம் பகுதியைச் சேர்ந்த 10 பேர் கடந்த 22ந் தேதி முதல் 24 ந் தேதி வரை டெல்லியில் நடந்த தப்லிக் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் 24 ந் தேதி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் சாலை மார்க்கமாக ஊர் திரும்பினர்.
இந்த நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய அரசு உத்தரவிட்டது. அதன்படி டெல்லியில் நடைபெற்ற தப்லிக் நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை கரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டில் வைத்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி 10 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை கரோனா வைரஸ் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கும் இரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவு வந்துள்ள நிலையில் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் இன்னும் யார், யார் டெல்லி சென்றார்கள் என்ற விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.