தமிழ்நாட்டில் கரோனாவின் இரண்டாம் அலை கடந்த மாதங்களில் உச்ச நிலையில் இருந்து, தற்போது சற்றே குறைய துவங்கியுள்ளது. இருந்தபோதிலும், சில இடங்களில் தொற்று பரவல் சில தினங்களாக அதிகரித்துவருகிறது. அதேசமயம், கரோனா இரண்டாம் அலை முடிந்து மூன்றாம் அலை பரவ அதிக வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் தகவல்கள் வருகின்றன. அதிலும் குறிப்பாக மூன்றாம் அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது. அதனால் தமிழ்நாடு அரசு, தற்போது தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.
இந்நிலையில், திருச்சியில் ஒரே வாரத்தில் 33 சிறுவர், சிறுமிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கரோனா தாக்கம் லேசாக அதிகரித்துவருகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதிவரை ஒருவார காலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 448 பேர். அவர்களில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 14 பேர், சிறுவர்கள் 19 பேர் என 33 பேர் ஆவார். அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் 214 பேரும், ஆண்கள் 201 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.