'ஒமிக்ரான்' வகை கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்தவகையில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று (02/12/2021) சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், ஒருவருக்குக் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு ஒமிக்ரான் வகை கரோனா பாதிப்பு உள்ளதா என்பது குறித்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கரோனா உறுதியான நபர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று உறுதியான நபர் உடனடியாக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு என்ன வகை கரோனா என தெரியவரும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் ஏற்கனவே ஒமிக்ரான் கரோனா பரவியுள்ள நிலையில், அங்கிருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (01/12/2021) விமான பயணிகள் 477 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.