கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 30 நாட்களை இந்த ஊரடங்கு உத்தரவு கடந்துள்ளது. இதனால் சிறு குறு வியாபாரிகள், கூலி தொழிலாளிகள், ஏழைமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள், ஏழை மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குவது, கிருமிநாசினி பொருட்களை வழங்குவது என உதவி பணிகளை தொடங்கினர். இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் 144 தடை உத்தரவை மீறி உதவுவது தவறு எனச்சொல்லி அதிமுகவில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர் திமுக நீதிமன்றத்தை நாடியது, நீதிமன்றம் அரசு நிர்வாகத்துக்கு தகவல் சொல்லிவிட்டு இடைவெளியை கடைப்பிடித்து உதவலாம் என அறிவித்தது. அதனை தொடர்ந்து திமுக வேகமாக உதவி பணிகளை செய்துவருகிறது.
இந்நிலையில் ஆளும்கட்சியான அதிமுக தலைமை உத்தரவுப்படி அதிமுக பிரமுகர்களும் களத்தில் இறங்கி உதவி பணிகளை செய்து வருகின்றனர். திமுக பிரமுகர்கள் செய்தது போலவே கட்டை பையில் 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், கடுகு, மிளகாய்தூள், சோப்பு எனப்போட்டு தரத்துவங்கியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு திமுக நிர்வாகிகள், ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினர். அதிமுகவினரும் அவர்களுக்கு உதவி பொருட்களை வழங்க தொடங்கியுள்ளனர். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் அதிமுக பிரமுகர்கள், மளிகை பொருட்கள் அடங்கிய பையை வழங்கினர்.