நாமக்கல் அரசு மருத்துவமனை கழிப்பறையில் கரோனா நோயாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அழகு நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் கடந்த 1ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அவருடைய மனைவி உடனிருந்து கவனித்துவந்தார். இந்நிலையில், ஜூன் 3ஆம் தேதி அதிகாலை படுக்கையில் இருந்து எழுந்த கரோனா பாதித்த அந்த நபர், கழிப்பறைக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வார்டுக்குத் திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி கழிப்பறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு அவரது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
கணவர் தூக்கில் சடலமாகத் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறினார். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது.
கரோனா நோய்த்தொற்றால் உடல் வலி அதிகமாக இருப்பதாகவும், தன்னால் வலி தாங்க முடியவில்லை என்றும் சொல்லிவந்துள்ளார். கடும் உடல் வலியின் அவஸ்தை தாங்க முடியாமல் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நாமக்கல் நகர காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இச்சம்பவத்தால் அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மற்ற நோயாளிகள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான நோயாளிகளுக்கு உளவியல் மருத்துவர்கள் மூலம் தக்க ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க முடியும்.