தனியார் மருத்துவமனைகளையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை அட்மிட் செய்து, சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள், அரசு மருத்துவர்களும் மருத்துவப்பணியாளர்களும். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்ட ஒசூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை அட்மிட் செய்யாமல் விரட்டுவதாக நமக்கு கிடைக்க விசாரிக்க ஆரம்பித்தோம். அதுவும், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷின் கட்டுப்பாட்டில் வரும் மாவட்டத்திலேயே இப்படியொரு அவலம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அப்பகுதி பொதுமக்களும் சமூக செயற்பாட்டாளர்களும்.
இதுகுறித்து, நாம் ஓசூர் அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் நாம் விசாரித்தபோது, “கரோனா பரவத்தொடங்கியதிலிருந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை எந்த கரோனா நோயாளியையும் அட்மிட் செய்ததில்லை. யார் அட்மிட் ஆவதற்காக வந்தாலும் அருகிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவோம்” என்கிறார்கள்.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அதுவும், நிரம்பி வழிவதால்தான் கோவிட் கேர் சென்டர்கள் எனப்படும் தனிமைப்படுத்தும் மையங்களை தனியார் கல்லுரிகளில் உருவாக்கி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறார்கள். அப்படியிருக்க, கிருஷ்ணகிரி மாவட்ட ஒசூர் ஜி.ஹெச்சில் மட்டும் எப்படி கரோனா நோயாளிகளை அட்மிட் செய்வதில்லை? அதுவும், சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி. அவரும் கண்டுகொள்ளவில்லையா? என்று நாம் கேட்டபோது, “மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டபிறகு இதுவரை, டாக்டர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ் ஒருமுறைதான் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தார். ஒசூர் ஜி.ஹெச்சுக்கு வந்து பார்க்கவில்லை. அதற்குப்பிறகு, இந்த மாவட்டத்துக்கும் வரவில்லை. ஒசூர் ஜி.ஹெச்சின் சூப்பிரண்டண்ட் பூபதி ஆளுங்கட்சியின் செல்வாக்கில் இருப்பவர். அதனால், கரோனா நோயாளிகளை அட்மிட் செய்து தேவையில்லாமல் வேலை பளுவைக் கூட்டிக்கொள்ளக்கூடாது என்றுதான் கரோனாவுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு விரட்டிவிடுகிறார்கள்.
இ.எஸ்.ஐ. மருத்துவமனை என்பது அப்பகுதியிலுள்ள பணியாளர்களுக்காக உள்ள மருத்துவமனை. அங்கு, ஏற்கனவே, நோயாளிகளால் நிரம்பிவழிகிறது. இந்நிலையில், ஒசூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை அட்மிட் செய்யாதது மிகப்பெரிய அவலம்” என்கிறார்கள்.
இதுகுறித்து, ஒசூர் அரசு மருத்துவமனை சூப்பிரண்டண்ட் டாக்டர் பூபதியை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “பிரவச வார்டுகள் எல்லாம் இருந்ததால் கரோனா நோயாளிகளை அட்மிட் செய்யவில்லை. தற்போது, அதையெல்லாம் பிரித்து கூடுதல் படுக்கைகளை உருவாக்கிவிட்டோம். ஆக்சிஜன் குழாய்களும் பதித்துவிட்டோம். அடுத்தவாரத்தில் கரோனா நோயாளிகளை அட்மிட் செய்து சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டு தயாராகிவிடும்” என்றார்.
“இதையேத்தான், பல மாதங்களாக சொல்லி சமாளித்துக்கொண்டிருக்கிறார் ஓசூர் ஜி.எச் சூப்பிரண்டண்ட் பூபதி. எல்லா, அரசு மருத்துவமனைகளிலுமே பிரசவ வார்டுகள் உள்ளன. அப்படியிருக்க, இந்த மருத்துவமனையில் மட்டும்தான் பிரசவ வார்டு இருப்பதுபோல் காரணத்தை கூறுகிறார்கள். இந்த மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து, வசதிகளும் ஏற்கனவே உள்ளன” என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்ஸை தொடர்புகொண்டு கேட்டபோது,இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸை தொடர்புகொண்டு கேட்டபோது, “சில, அரசு மருத்துவமனைகளில் மட்டும் அங்குள்ள நோயாளிகளுக்கு கரோனா பரவும் சூழல் இருந்தால் அட்மிட் செய்வதில்லை. இருந்தாலும் ஒசூர் அரசு மருத்துவமனையில் என்ன சூழல் என்பதை தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மூலம் ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் நம்பிக்கையாக.