திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, திண்டுக்கல்லில் கரோனா தொற்று அதிகரிப்பதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் தினமும் சராசரியாக 200 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுக்கு திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும் கூட வார்டுகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால் பல கரோனா நோயாளிகள் நடைபாதைகளிலும் பெட்டுக்கு கீழ் பகுதிகளில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பழனி மற்றும் திண்டுக்கல்லில் செயல்படும் இரண்டு சிறப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் தற்போது 1600 க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். அதில் 166 பேர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கரோனா பாதித்த பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்டத்தில் மொத்தம் 46 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கிறது. அதில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 14 கட்டுப்பாட்டு பகுதிகளும், பழனியில் 8 கட்டுப்பாட்டு பகுதிகளும் உள்ளன. திண்டுக்கல் மாநகராட்சியில் 250 பேரும், பழனியில் 350 பேரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர். திண்டுக்கல், பழனி நகரங்கள் வெளியூர் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளாக இருப்பதால் நோய் தொற்று அதிகமாக இருக்கிறது. எனவே பொதுமக்கள் முககவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், சோப்பு அல்லது கிருமிநாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் ஆகியவற்றை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.