உலகத்தை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. முன்னெச்சரிக்கையாக இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. இன்று மேலும் 31 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், அதில் மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை(ஏப்ரல்15) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காணொலி காட்சி மூலமாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துமாறு காவல்துறை திமுக-வை அறிவுறுத்தியது. இதையேற்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் காணொளி காட்சி மூலம் வரும் 16 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற நேரத்தில் கரோனா நோய்த் தொற்று குறித்து முதலமைச்சர், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடனும் - ஏன், மருத்துவ நிபுணர்களுடனும், மதத் தலைவர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் கொடிய கரோனா நோய் குறித்து 15.4.2020 அன்று நடைபெறும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று காவல்துறை மூலம், அதிமுக அரசு நோட்டீஸ் கொடுக்க வைத்தது. தனிமனித இடைவெளி விட்டு, அரசின் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, கூட்டம் நடத்தப்படும் என்று மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டும் - சென்னை மாநகர காவல்துறை, தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது.
கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதிமுக அரசு பிடிவாதமாகச் செய்வது போல், ஜனநாயக நெறிகளுக்கு முரணான அரசியல் செய்ய, திராவிட முன்னேற்றக் கழகம் சிறிதும் விரும்பவில்லை. தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினை குறித்து , திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும்; 16.4.2020 (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் அன்று அனைத்துக் கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.