கரோனா பரவல் தொடங்கியது முதல் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட எதிர்கட்சி தலைவர்கள், ஏழை மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் அவர்களின் பசியை போக்க 5 ஆயிரம் நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள்.
தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாகட்டும், மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் இரண்டுமே அதுப்பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. தமிழகத்தில் பல வலியுறுத்தல்களுக்கு பின்பு இலவச அரிசியும், ரேஷன் அட்டைக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கியதோடு முடித்துக்கொண்டது.
3 மாதகாலமாக வேலைக்கு செல்ல முடியாமல், வேலையில்லாமல் தமிழகத்தில் லட்ச கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளார்கள். அடுத்த வேளை உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஒரு ரேஷன் அட்டைக்கு 10 ஆயிரம் தரவேண்டும் என்கிற கோரிக்கையை இன்னமும் எதிர்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜூன் 25ந்தேதி பொதுமக்கள் கூட்டம் அதிகமாகயிருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள், கையில் மனுவை வைத்துக்கொண்டு யாரிடம் தருவது எனத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தனர். அந்த மனுவில் விவசாய கூலி தொழிலாளியாக உள்ளேன். கரோனாவால் வேலையில்லாமல் வறுமையில் வாடுகிறேன், எனக்கு 10 ஆயிரம் ரூபாய் கரோனா நிதியாக வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டு அதோடு தங்களது ஆதார் கார்டு, குடும்ப அட்டை நகல் போன்றவற்றை இணைத்து மனுவை தயாரித்து வைத்திருந்தனர்.
அனைவரின் மனுவிலும் ஒரே வாக்கியமாக இருந்தது. அந்த மனுக்களை தாலுகா அலுவலத்தில் வழங்க அப்படியெதுவும் வழங்கவில்லை. இதுகுறித்து மனுவாக தந்தால் வாங்க முடியாது என அலுவலக ஊழியர்கள் கூறியுள்ளனர், இதனால் மக்கள் தவித்து போய்விட்டனர். செங்கம் தாலுகாவில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து மனு தந்துள்ளனர். யாரோ தவறான தகவலை கிளப்பிவிட அது பொய்யென தெரியாமல் பொதுமக்கள் வந்து மனுவை தருகிறார்கள் என சலித்துக்கொண்டார்கள் ஊழியர்கள்.