தேனி மாவட்டத்திலிருந்து, டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 23 பேர் உள்பட மொத்தம் 41பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து மற்ற 40 பேருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் அவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் தேனி அல்லிநகரம், போடி, பெரியகுளம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 18 பேர் குணமடைந்து நேற்று முன்தினம் (16/04/2020) வீடு திரும்பினர். இந்த நிலையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அல்லி நகரத்தைச் சேர்ந்தவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் இரண்டு மகள்களுக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் அவரின் மனைவிக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் குணமடைந்து வீடு திரும்பிய ஒருவரின் மனைவிக்கு கரோனா பாதிப்பு இருப்பது நேற்று (17/04/2020) உறுதி செய்யப்பட்டது. இருவரும் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று (17/04/2020) ஒரே நாளில் இரண்டு பெண்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் தேனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 24 பேர் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் 65 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த 96 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 21 பேர் தொடர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் நேற்று (17/04/2020) மேலும் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
திண்டுக்கல்லில் 95 வயது மூதாட்டிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவர் மூலம் மூதாட்டிக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றன. இதையடுத்து மூதாட்டியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.