கடலூர் மாவட்டம் வடலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் சொந்த வேலையாக இன்று மதியம் காடாம்புலியூர் சென்றுவிட்டு அரசு பேருந்தில் வடலூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்கள் வெளியூரிலிருந்து வந்ததால் ஏற்கனவே இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த சமயத்தில் அந்த தம்பதிகளை செல்போனில் தொடர்பு கொண்ட சுகாதாரத்துறையினர் கரோனா நோய்த் தொற்றை உறுதி செய்து, உடனடியாக மருத்துவமனைக்கு வரச் சொல்லியுள்ளனர். அவர்கள் பேருந்தில் பயணம் செய்ததால் இந்த தகவல் நடத்துநருக்கு தெரிவிக்கப்பட்டது.
பேருந்தில் பயணம் செய்த தம்பதிகளுக்கு தொற்று உறுதியானதால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் பேருந்தை சாலை ஓரம் நிறுத்தியுள்ளார். அதையடுத்து தகவல் கேள்விப்பட்டு பேருந்தில் இருந்து பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் என எல்லோரும் அலறியடித்து இறங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தம்பதிகள் மட்டும் பேருந்தில் அமர்ந்திருந்தனர். அதன் பின்பு சுகாதாரத்துறையினர் தம்பதிகளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன் பின்பு பேருந்து வடலூர் பணிமனைக்கு எடுத் து செல்லப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.இந்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.