
தமிழக முதல்வர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தஞ்சை வந்து சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலை, தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மீண்டும் திருச்சியில் மாலை நடைபெற உள்ள புதிய பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தர உள்ளார்.
திருச்சியில், உணவு பாதுகாப்புத் துறையில் பணியாற்றக்கூடிய மாவட்ட அளவிலான நியமன அலுவலர்களை முதல்வருக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறிமுக விழாவில் கலந்து கொள்ளக் கூடிய அனைத்து அதிகாரிகளுக்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில் திருச்சி உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபுவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வியாபாரிகள் இடையே ஆய்வுக் கூட்டங்களை நடத்தியும், பல இடங்களுக்கு அவர் நேரடியாக சென்று வந்ததால் இந்த நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.