கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கரோனா தொற்று பரவல் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிப்பதையடுத்து கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்கும் நிகழ்ச்சி பத்திரிகை நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று (13.08.2020) விருத்தாசலம் நந்தவனம் காய்கனி மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மூத்த பத்திரிகையாளரும், சங்க பொருளாளருமான ஆ.மலர்தாசன் தலைமை தாங்கினார். செயலாளர் மாய.முனுசாமி வரவேற்புரையாற்றினார். சங்க தலைவர் தியாக.இளையராஜா, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அகிலன், ஒருங்கிணைப்பாளர் சி.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடங்கி வைத்து வியாபாரிகளுக்கும், மார்க்கெட் வந்த மக்களுக்கும் கிருமி நாசினி தெளித்து, முக கவசங்கள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகை நண்பர்கள் நலச் சங்கத்தை சார்ந்த அங்கத்தினர்கள் விருத்தாசலம் நகரத்திற்கு நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து தங்களின் அத்தியாவசிய பணிகளுக்காக வந்து செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும் பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று வீரியம் குறித்தும், தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துக்கூறி சானிடைசர் தெளித்து, முகக் கவசங்கள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிகளில் சங்கத்தின் இணைச் செயலாளர் இல.வீரபாண்டியன், துணை செயலாளர்கள் சீனு.துரை, பொன். செல்வசுப்பிரமணியன் மற்றும் சங்க அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அலுவலக செயலாளர் செல்வமணி நன்றி கூறினார்.