தமிழகத்தில் மேலும் இன்று 805 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அவர் கூறுகையில்,
இன்று பாதிக்கப்பட்ட 805 பேரில், 710 பேர் தமிழகத்திலும் மற்றவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 549 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 7 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 407 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,731 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 480 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் தகவல்களை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டதில் 88 சதவீதம் பேர் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 12 சதவீதம் பேர் மட்டுமே அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார்.