டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான முஸ்லிம்கள் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். இப்படி வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றதில் தமிழகத்தில் 110 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் கோவையில் 28 பேரும், தேனியில் 20 பேரும், திண்டுக்கல்லில் 17 பேர் என மூன்றாவது இடத்தில் திண்டுக்கல் இருக்கிறது.
ஆனால் கடந்த இரண்டு நாளைக்கு முன்பு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பத்திரிகையாளரும் பேசும்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூட கிடையாது என்று ஆணித்தரமாக கூறி இருந்ததைக் கண்டு மக்களும் சந்தோஷத்தில் இருந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து டெல்லி சென்று வந்தவர்கள் 90 பேரில் 17 பேருக்கு திடீரென கரோனா பரவி இருப்பதைக் கண்டு நகரில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கி விட்டனர்.
அதோடு மேலும் பலருக்கு கரோனா நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்தும் வருகிறார்கள். அதுபோல் டெல்லி கூட்டத்திற்கு சென்று வந்தவர்கள் வசித்த பகுதிகளான பேகம்பூர், மக்கான் தெரு, பூச்சி நாயக்கன்பட்டி, நத்தர்ஷாதெரு, முகமதியாபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வராத அளவுக்கும் வெளியிலிருந்து மக்கள் உள்ளே செல்லாத அளவுக்கும் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் திடீரென திண்டுக்கல் நகரில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதைக் கண்டு மாநகரில் உள்ள பெரும்பாலான பகுதியில் இருக்கும் மக்கள் வெளியே வரவே அஞ்சி வருகிறார்கள். இதனால் மெயின்ரோடு, சாலை ரோடு, பழனி ரோடு உள்ளிட்ட சில சாலைகளும், தெருக்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதுபோல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.