தென் இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளும் பங்கேற்றன. டெல்லியில் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை சென்னை திரும்பினார்கள். காலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.
அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்
பாரத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு தழுவிய விவசாயிகளின் கோரிக்கையான கடன் தள்ளுபடி மற்றும் நியாயமான விலை இது இரண்டும் நியாயமான ஒன்று அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை நாங்களும் வலியுறுத்துவோம்.
கஜா புயல் பணிகள் மந்த நிலையில் உள்ளது குறித்த கேள்விக்கு ,எதிர்கட்சிகளின் குரலாக பார்க்காமல் மக்களின் குரலாக பார்க்க வேண்டும் என்றும் இது விவாதம் செய்வதற்கான நேரம் இல்லை, நிறைய கிரமாங்களுக்கு நிவாரணங்கள் செல்லவில்லை. அரசு அதிகாரிகளும் இன்னும் செல்லவில்லை. இதில் யாரும் அரசியல் செய்யவில்லை. பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தான் கூறுகிறோம். இதனை விமர்சனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
மத்திய அரசு அறிவித்துள்ள இடைக்கால நிவாரணத் தொகைக்கு நன்றி. இதோடு நிறுத்துவிடமால் வேகமாக செயல்படவேண்டும்.
விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு, விவசாயிகள் பசி என தான் கூறுகின்றனர். ஆனால் கேட்ட முறை தவறு. கூறுவது சரி இல்லை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடன் தள்ளுபடி தவிர வேறு வழியில்லை அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க இன்னும் ஏழு வருடங்கள் ஆகும் என அவர் தெரிவித்தார்.