கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்ட
நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ்
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்ட நடவடிக்கை வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளால் ஏற்பட்ட சீரழிவுகளின் சாட்சியாய் நிற்கும் நிறுவனங்களில் மிகவும் முக்கியமானவை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் ஆகும். அவற்றுக்குரிய வருவாய் ஆதாரங்கள் அனைத்தும் திராவிடக் கட்சி ஆட்சிகள் மேற்கொண்ட தவறான முடிவுகளால் அடைக்கப்பட்டு விட்டதால் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கு கூட வழியின்றி அவை தவிக்கின்றன.
இந்தியாவின் எந்த மாநிலங்களுடன் ஒப்பிட்டாலும் வீட்டு வசதியில் தமிழகம் மிகவும் முன்னேறி இருப்பதற்கு முக்கியக் காரணம் தமிழகத்தில் செயல்பட்டு வந்த கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் தான். இந்த சங்கங்களின் மூலம் மக்கள் மிகவும் எளிதாக கடன் பெற்று வீடு கட்ட முடிந்ததாலும், அரசின் மூலமான வீட்டு வசதித் திட்டங்கள் அனைத்தும் இந்த அமைப்புகள் மூலம் செயல்படுத்தப் பட்டதாலும் மக்களுக்கு அதிக எண்ணிக்கையில் வீடுகள் கிடைத்தன. இதனால் கிடைத்த வருவாயைக் கொண்டு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களும் அதிக வருவாய் ஈட்டி மிகவும் செழிப்பாக இருந்தன.
ஆனால், கடந்த பத்தாண்டுகளில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலை படிப்படியாக மோசமடைந்து இப்போது பரிதாபமான நிலையை அடைந்துள்ளன. தமிழகத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மொத்தம் 850 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் இருந்தன. அவற்றில் 400-க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் நலிவடைந்து முடங்கிக் கிடக்கின்றன. இவற்றின் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நான்கரை ஆண்டுகளாக ஊதியம் கூட வழங்கப்படவில்லை. அவர்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையாக மட்டும் இதுவரை ரூ.45 கோடி வழங்க வேண்டியிருக்கிறது. இதை வழங்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாததால் கூட்டுறவு வீட்டுவசதி வாரிய ஊழியர்கள் கடும்பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர். குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவு ஆகியவற்றுக்குக் கூட பணமில்லாமல் அவர்கள் தவிக்கின்றனர். மற்றொரு பக்கம் வீட்டு வசதித் திட்டங்களை செய்ல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய அனுபவம் இல்லாததால் அந்தத் திட்டங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
2022&ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரும் திட்டத்தை பிரதமர் அறிவித்திருக்கிறார். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை. எனவே, கூட்டுறவு வீட்டு வசதி வாரியங்களுக்கு புத்துயிரூட்டி, திறமையான அதிகாரிகள் மூலம் வீட்டு வசதித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நலிவடைந்த வீட்டு வசதி வாரியங்களின் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவும் பினாமி அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.