கூட்டுறவு வங்கி முறைகேடு: அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து சாலைமறியல்!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள ஆவணம் டி-1272 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மோசடி சம்பந்தமாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஒப்புக்கொண்டபடி நடக்காத கூட்டுறவுத்துறை அதிகாரிகளை கண்டித்து ஆவணம் கடைவீதியில் வரும் அக்டோபர் 4ந்தேதி புதன்கிழமை அன்று சாலைமறியல் செய்யப்போவதாக ஆவணம்-பெரியநாயகிபுரம் கிராம பொதுமக்கள், விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆவணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடந்த ஆண்டு நவம்பர் 15 ந்தேதி சாலைமறியல் செய்யப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து அதற்கு முதல் நாள் நவம்பர் 14 ந்தேதி பேராவூரணியில் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 20 தினங்களுக்குள் நகை திருப்பி வழங்கப்படும். பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனராம். ஆனால் 10 மாதங்கள் கடந்தும் ஒப்புக்கொண்டபடி நகை மற்றும் பணத்தை திருப்பித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள்- பொதுமக்கள் கூட்டமைப்பு, கூட்டுறவு துறை அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக கூறி ஆவணம் கடைவீதியில் வரும் அக்டோபர் 4 ந்தேதி புதன்கிழமை அன்று, சிபிஎம் ஒன்றியச்செயலாளர் ஏ.வி.குமாரசாமி தலைமையில் சாலைமறியல் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் கே.எம்.எஸ்.அபுபக்கர், ஜி.மதிவாணன், சிபிஐ நிர்வாகிகள் எம்.அண்ணாதுரை, எம்.லெனின், எம்.ரகுபதி மற்றும் பொதுமக்கள் சார்பில் எஸ்.கண்ணன், ஆர்.மாசிலாமணி, வி.இளங்கோ, எல்.மார்கண்டேயன், இ.கலைவாணி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். சாலைமறியல் அறிவிப்பு காரணமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- இரா.பகத்சிங்