வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக மாற்றி, அவற்றைச் சட்டவிரோதமாக இளஞ்சிறார்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், பாகாயம் காவல் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர்களின் தலைமையிலான போலீசார் முல்லை நகர் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் இரவு நேரத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கிஷோர்குமார்(19) என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று' ஆரஞ்சு நிறம் கொண்ட மாத்திரைகளான ஒரு வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக மாற்றி பிளாஸ்டிக் கவரில் வைத்து முத்துமண்டபம் பகுதியைச் சேர்ந்த இளஞ்சிறார்க்கு விற்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டார். கிஷோர்குமாரிடம் போலீஸ் நடத்திய தொடர் விசாரணையில் கிஷோரின் மாமா ரஞ்சித் என்பவர் மூலம் பள்ளிகொண்டவை சேர்ந்த அபிஷேக் என்பவரிடம் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளையும், அதற்கு பயன்படுத்தும் சிரஞ்சிகளையும் சட்டவிரோதமாக வாங்கி வந்து வேலூர் கஸ்பாவை சேர்ந்த பூபாலன், ஓல்டு டவுன் விக்னேஷ் மற்றும் சிவக்குமார் ஆகியோர்களுடன் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களை குறிவைத்து கடந்த இரண்டு மாதங்களாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாகாயம் காவல் நிலையம் போலீசார் முக்கிய குற்றவாளிகளான வேலூர் மாநகரைச் சேர்ந்த ரஞ்சித்(29) சிவக்குமார்(38) பூபாலன்(27) கிஷோர்குமார்(19) ;விக்னேஷ்(19) ஆகிய ஐந்து நபர்களை கைது செய்தனர். அவர்களடமிருந்து வலி நிவாரணி மற்றும் போதை மாத்திரைகளையும் அதனை விற்க பயன்படுத்திய கார், மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், பின்னர், அவர்களை வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.