சாதி குறித்த சர்ச்சைக்குரிய வினா விவகாரத்தில் எந்த விதமான உள்நோக்கமோ, நேரடியான தொடர்போ இல்லை என்று பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சாதி குறித்த சர்ச்சைக்குரிய வினா விவகாரத்தில் வருத்தம் தெரிவித்திருக்கும் பெரியார் பல்கலைக்கழகம், பிற பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகத்தில் இணைவுப் பெற்ற கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியரைத் தலைவராக நியமித்து, அவரது மேற்பார்வையில் வினாத்தாள் தயாரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
அவரே இறுதி செய்து பல்கலைக்கழகத்திற்கு வினாத்தாள்களை அனுப்பி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தயாரிக்கப்படும் வினாத்தாள்களை பல்கலைக்கழக தேர்வுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எவரும் படிப்பதற்கு அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய வினா விவகாரத்தில் எந்தவிதமான உள்நோக்கமோ, நேரடியான தொடர்போ பல்கலைக்கழகத்திற்கு இல்லை. இதனால் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் இதுபோன்று சர்ச்சை ஏற்படாத வகையில், வினாத்தாள் தயாரிக்கப்படும் என்றும், மேலும் இந்த வினாத்தாள் குறித்து முறையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி அளித்திருக்கிறது.