Skip to main content

தொடர் கனமழை... மீண்டும் மிதக்கும் சென்னை... ( எக்ஸ்க்ளூசிவ் படங்கள் )

Published on 07/11/2021 | Edited on 07/11/2021

 

படங்கள்: அசோக் குமார், குமரேஷ்,  ஸ்டாலின்

நேற்றிரவு முதலே சென்னையில் பல இடங்களில் கனமழை தொடர்ச்சியாகத் தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி, சென்னையில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்பி வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்குத் தென்மேற்கு வங்கக்கடல் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக வீடுகளில் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கனமழை காரணமாகத் தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. ஈவிஆர் சாலை சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் இலகுரக இருசக்கர வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கண்காணிப்பு அதிகாரிகள் 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 3:50 முதல் மீண்டும் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

 

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். வேளச்சேரி ராம்நகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. மெரினா கடற்கரைச் சாலை, பாண்டி பஜார் சாலை மழைநீர் தேங்கியது. தி.நகர் விஜயராகவன் சாலையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரில் சிக்கியவர்களைத் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பொதுமக்களைப் படகில் அழைத்து  வந்தனர். தணிகாசலம் சாலை மழைநீர் தேங்கியது. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்திலிருந்த மரம் சாய்ந்து விழுந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பெரியார் சாலை, மூர் மார்க்கெட் அருகே பிராட்வே குரலகம் அருகே ராயப்பேட்டை நெடுஞ்சாலை, எழும்பூர் வரதராஜாபுரத்தில் உள்ள சின்ன குழந்தை தெருவில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. எழும்பூர் கெங்கி ரெட்டி பாலத்தில் தேங்கிய மழை நீரில்  இளைஞர் ஒருவர் குளித்தார். வியாசர்பாடி ஜீவா ரயில்நிலைய பாலத்தின் கீழ்வந்த பெண்மணி பள்ளத்தில் தவறி விழுந்தார். வியாசர்பாடி கல்யாணபுரம் சென்னை மாநகராட்சி பள்ளியில் மழை நீர் புகுந்தது. இப்படி மீண்டும் மழைநீரில் மிதக்கத் தொடங்கியுள்ளது 'சென்னை'

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.