கடந்த சில தினங்கள் முன்பு ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் தனியார் பேருந்து பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவர் மற்றும் விளக்கு கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தடுப்புச் சுவரில் மோதி பேருந்து நின்றதால், கடலில் விழாமல் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட நிலையில், பேருந்து கடலில் விழுந்து விடாமல் தடுக்க கயிறுக்கட்டிப் பேருந்தை பாலத்தின் நடுப்பகுதிக்கு பொதுமக்கள் இழுத்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை ராமநாதபுரம் நோக்கிச் சென்ற ஒரு அரசுப் பேருந்தும் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ஒரு அரசுப் பேருந்தும் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகின.
இதில் 20 பேர் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பேருந்துகளும் சேதமடைந்தன.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரு பேருந்து பாலத்தின் தடுப்பில் மோதியது. பேருந்து கடலில் விழுந்துவிடாமல் இருக்க பொதுமக்கள் இந்த முறையும் கயிறு கட்டி அந்த பேருந்தை இழுத்தனர்.