விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து மது கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் கரோனா பரவல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி மேல்மலையனூர் அருகே அமைக்கப்பட்டுள்ள ஞானோதயம் சோதனைச்சாவடியில் வளத்தி காவல் நிலையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், போலீசார் மணிகண்டன், யுவராஜ் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செஞ்சியில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக சோதனை சாவடியை கடந்து சென்று உள்ளது. அதை தடுத்து நிறுத்தி அதில் போலீசார் சோதனையிட்டனர். அந்த லாரியில் நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகள் இருந்தன. அதனை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அந்த அரிசி மூட்டையை பிரித்து பார்த்தபோது அவை அனைத்தும் ரேஷன் அரிசி என்பது தெரிய வந்துள்ளது. மொத்தம் அந்த கண்டெய்னர் லாரியில் 24 டன் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கண்டெய்னர் லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முரளி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் செஞ்சியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்துள்ளது. ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக அரிசி கடத்தலில் தொடர்புடைய முரளி மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த அரிசி எங்கிருந்து யார் மூலம் வாங்கப்பட்டது இதை கடத்துவதற்கு யார் யார் துணையாக இருந்தார்கள் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.