எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று 11.30 மணிக்கு வெளியிட்ட தீர்ப்பில், 'அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் இருந்த நிலையே நீடிக்கும். எனவே ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பொதுக்குழுக் கூட்டம் நடத்தவேண்டும். தனிக் கூட்டம் கூடக்கூடாது. பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும். இபிஎஸ்-ஐ பொதுச்செயலராக தேர்வு செய்தது செல்லாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது' என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினர். இதற்காக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திர உள்ளிட்ட பலர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வருகை தந்தனர்.