கன்னியாகுமரியில் ரயில் தண்டவாளத்தில் கருங்கல் பாறை வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை -குருவாயூர் விரைவு ரயில் கன்னியாகுமரி அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலில் அதிர்வு ஏற்பட்டதாக ரயிலில் ரயில் ஓட்டுநர் புகார் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்தபோது தண்டவாளத்தில் கருங்கல் பாறை இருந்தது தெரியவந்தது. இதனால் ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றதா என்ற ஒரு சந்தேகம் ரயில்வே ஊழியர்களுக்கு ஏற்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் மற்றும் குழித்துறை வழித்தடங்களுக்கிடையே சென்னையிலிருந்து குருவாயூர் செல்லக்கூடிய குருவாயூர் விரைவு ரயில் கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ரயில் அதிர்வை உணர்ந்து. இதனை உணர்ந்த ரயில் ஓட்டுநர் ரயில் மீது எது மோதியதாக அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அந்த பகுதியில் ஆய்வு நடத்தினர். அதில் கருங்கல் பாறை ஒன்று துண்டு துண்டாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில்வே தண்டவாளத்தில் அந்த பாறை தற்செயலாக கிடைந்ததா அல்லது ரயிலை கவிழ்க்கும் நோக்கத்தோடு யாரேனும் இதனை செய்துள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னையிலிருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயில் இன்ஜின் கோளாறு பழனி அருகே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட சென்னை-பாலக்காடு ரயில் இன்று காலை 8 மணிக்கு பழனி வருவதாக இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கோம்பைபட்டி என்ற பகுதியில் இன்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் சுமார் ஒன்றரை மணி நேரமாக நின்றுவிட்டது. இதனால் அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். என்ஜின் பழுது சரி செய்யப்படவில்லை எனில் மாற்று ரயில் என்ஜினை கொண்டுவந்து ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.