Skip to main content

காங்கிரஸ் - ம.நீ.ம கூட்டணியா? குரல்கொடுத்த நிர்வாகிகள்!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

Congress-M, NM alliance?

 

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று (04.03.2021) சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் இந்த அவசர செயற்குழுக் கூட்டத்தில் பங்குபெற்று ஆலோசனை நடத்திய நிலையில், ஆலோசனைக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், “திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்னையும் கிடையாது. நல்ல முடிவு எடுக்கப்பட்டு, திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று மாலைக்குள் நல்ல முடிவு வெளியாகும்” என்றார்.

 

ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கேட்கும் இடங்களை திமுக கொடுக்கவில்லை என்றால் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்கலாம் என சில நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக நல்ல மரியாதை கொடுக்கும் வகையில், 30 தொகுதிகளுக்குக் குறையாமல் சீட் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும் எனவும் இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த ஆலோனைக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் பேசுகையில், “திமுக கூட்டணியில் எவ்வளவு சீட்டு கேட்கலாம் எனக் கேட்டார்கள். அதற்கு எங்களுடைய ஒட்டுமொத்தக் கருத்தும், காங்கிரசுக்கு ஒரு மரியாதையான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்க வேண்டும். அதில்தான் சில முரண்பாடுகள் இருக்கிறது. கேட்கும் இடங்கள் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்யலாம் என மேலிடத்தில்  கேட்டார்கள். தனித்து நிற்கலாம், அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் எனக் கூறியுள்ளோம். அதேபோல் திமுகவிடம் கேட்கும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்பதுதான் எங்களுடைய கருத்து. ஆனால் எல்லாம் மேலிடம்தான் முடிவு செய்யும்” என்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்