Skip to main content

மத்திய சிறையில் பரபரப்பு! கைதிகளுக்கிடையே மோதல்! 

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

மதுரை அரசரடி அருகே புதுஜெயில் ரோடு பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 1300க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இந்நிலையில், சிறையில் முதல்தள பிரிவில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறைக்கு வந்த திருச்சியைச் சேர்ந்த சிறைவாசிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து மதியம் உணவு இடைவேளையின் போது  சாப்பிட வந்த சிறைவாசிகள் இரு தரப்பினரிடையே திடீரென மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாகி பிறகு மோதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறைவாசிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்திய சிறைவாசிகள் சிலர் தங்களது உடலில் பிளேடுகளால் காயம் ஏற்படுத்திக்கொண்டதோடு, சிறைச்சாலையின் சுவர்களில் ஏறி நின்று கற்களை சாலைகளை நோக்கி வீசி எறிந்து சிறைத்துறை நிர்வாகத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

இதனையடுத்து சிறைத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வம் இரு தரப்பினரின் மோதலை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கல்வீச்சில் ஈடுபட்ட சிறைவாசிகளை சிறைத்துறை காவலர்கள் அழைத்துசென்று சிறையில் அடைத்தனர். மேலும் மோதலில் காயம்பட்டவர்களுக்கு சிறைவளாக மருத்துவர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

 

மதுரை மத்திய சிறையில் 2019ஆம் ஆண்டு சிறைவாசிகள் அடிப்படை வசதிகள் கோரி சிறைச்சாலை சுவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது மீண்டும் சிறை வளாகத்திலயே சிறைவாசிகள் பாட்டில்கள், கற்களை எறிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைவாசிகள் மோதலை தொடர்ந்து சிறை வளாகத்தை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்