ராகுல்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவத்தை
வன்மையாக கண்டிக்கிறேன்: திருநாவுக்கரசர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:
’’காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த போது பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சில வன்முறையாளர்கள் ராகுல்காந்தி பயணம் செய்த காரின் மேல் கல்வீசி தாக்கியிருப்பது காட்டுமிராண்டித்தனமான வன்முறை செயலாகும்.
குஜராத் மாநிலத்தில் ஆட்சியும், கட்சியும் ஜனநாயகத்திற்கு விரோதமாக தான்தோன்றித்தனமாக எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த வன்முறைச் சம்பவமே சரியான உதாரணமாகும். காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தலைவர், துணைத் தலைவர்- வருங்கால பிரதமராக மக்களால் போற்றப்படும் தலைவர் ராகுல்காந்திக்கே இந்நிலை என்றால், சாதாரன கட்சித் தொண்டர்களையும், மக்களையும் அதிகாரத்தில் உள்ள பி.ஜே.பி.யினர் குஜராத்தில் எப்படி நடத்தி வருகின்றனர் என்பதை நாட்டு மக்கள் இச்சம்பவத்தின் மூலம் உணர்ந்து முகம் சுளிப்பர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைவர் ராகுல்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட இவ்வன்முறை சம்பவத்தை - தகாத காட்டுமிராண்டித்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.’’