ஈரோடு மாவட்டத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பெரிதும் பூர்த்தி செய்வது பவானிசாகர் அணையில் இருந்து வரும் நீரான கீழ்பவானி வாய்க்கால் தான். சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் 5 லட்சம் மக்களின் குடிநீருக்கு ஆதாரமே இந்த வாய்க்கால் தான். கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்த அதில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு அரசு ரூபாய் 710 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், அந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் அதன் இருபுறமும் உள்ள பல லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரம் பெற்று வரும் 100 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் கடும் பாதிப்புக்குள்ளாகும் என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் அந்த வாய்க்கால் முடிவடையும் கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வாய்க்காலை நவீனப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்ககூடாது என வலியுறுத்தி வரும் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் பாசனதாரர்கள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோருடன் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் 11 ந் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இரு தரப்பு விவசாய அமைப்பினரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்தார்கள்.
கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக அரசை பொறுத்தவரை இப்பிரச்னையில் நடுநிலையாகவே செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாய்க்காலின் மேல் பகுதி விவசாயிகள் முதல் கடைமடை விவசாயிகள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாய்க்காலின் தரைப்பகுதியில் கான்கிரீட் அமைக்கப்பட மாட்டாது. கரை பலவீனமாக உள்ள பகுதிகளிலும், கரை உடைந்துள்ள பகுதிகளிலும் மட்டுமே கான்கிரீட் அமைக்கப்படும். மேலும், மதகுகள் சீரமைக்கப்படும். தேவையான இடங்களில் படித்துறைகள் அமைத்தல், வாய்க்காலின் குறுக்கே ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிறு பாலங்களை, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றியமைத்தல், கடைமடை வரை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
மேலும், எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது குறித்த பட்டியலும் கீழ்பவானி பாதுகாப்பு இயக்கத்தினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் மாற்றங்கள் தெரிவிக்கும் பட்சத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என பாசனதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கலந்து ஆலோசித்து முடிவை தெரிவிக்குமாறு கேட்டுள்ளோம்" என்றார்.
வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என ஒரு தரப்பும், அமைத்தால் விவசாயிகள் திரண்டு அரசுக்கு எதிராக போராடுவோம் என மற்றொரு தரப்பு விவசாய அமைப்பு எதிர்ப்பு தெரிவிப்பதால் வாய்க்கால் கான்கிரீட் தள விவகாரம் விவசாயிகளை இரு பிரிவாக மாற்றியுள்ளது.