Skip to main content

தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்? - உறவினர்கள் போராட்டம்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Complaint that woman passed away due to wrong treatment in Perundurai

ஈரோடு, திண்டல் பழனி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம். கட்டட தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி (44). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் வளர்மதிக்கு காது வலி ஏற்பட்டதால் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 23 ஆம் தேதி காய்ச்சல் இருந்ததால் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனளிக்காமல் வளர்மதி உயிரிழந்தார். தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் வளர்மதி இறந்துவிட்டதாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது வளர்மதியின் பிரேதப் பரிசோதனையை மூவர் கொண்ட குழுவினர் முன்னிலையில் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை வளர்மதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று மதியம் நாடார் மக்கள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளர் எம்.கே.டி. கோவிந்தசாமி, பூமிநாதன், அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க நிறுவனத் தலைவர் உள்பட ஏராளமானோர் திடீரென மருத்துவமனை முன்பு உள்ள பெருந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும். சிகிச்சை அளித்த டாக்டரை கைது செய்ய வேண்டும். உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 62 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவர் கொண்ட குழுவினர் முன்னிலையில் வளர்மதியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சார்ந்த செய்திகள்